×

கடும் வெயிலுக்கு இடையே கேரளாவில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் வாட்டி வதைத்து வரும் கடும் வெயிலுக்கு இடையே இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கேரளாவில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வழக்கத்தை விட கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கத்தை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.

பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெப்பநிலை 41 டிகிரி செல்சியசை தாண்டியது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இது தவிர திருச்சூர், கோழிக்கோடு உள்பட சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பகல் நேரங்களில் சாலைகளில் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. வெயில் கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக பெரும்பாலானோர் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அங்கு போக முடியாதவர்கள் மால்கள், தியேட்டர்கள் உள்பட குளு குளு வசதி செய்யப்பட்ட இடங்களுக்கு செல்கின்றனர். இந்தநிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கிடையே கேரளாவில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா உள்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இன்று முதல் 4 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post கடும் வெயிலுக்கு இடையே கேரளாவில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Meteorological Department ,Dinakaran ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...